விஷ்ணு புராண கதைகள்
ஸ்ரீ ஆராவமுத தாதயார்ய மஹாதேசிகாய நம:

ஸ்ரீதேவி பிராட்டியாரின் திருத்தோற்றம்ு

அகலகில்லேனிறையுமென்று அலர்மேல்மங்கை யுறைமார்பா!
நிகரில் புகழாய்! உலகமூன்றுடையாய்! என்னையாள்வானே!
நிகரிலமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே!
புகலொன்றில்லா வடியேன் உன்னடிக் கீழமர்ந்து புகுந்தேனே - திருவாய்மொழி (6-10-10)

அசுரர்களும் தேவர்களும் திருபாற்கடல் கடைய எவ்வாறு முன்வந்தார்கள் என்றும், கடையும்போது எவ்வாறு எம்பெருமான் கூர்மாவதாரம் எடுத்து மந்தர மலையை தாங்கினார் என்பதை போன இதழில் கண்டோம். இவ்விதமாக அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலை கடைந்து கொண்டிருக்கும்போது, மிகவும் அபூர்வமான காமதேனுவும். வாருணிதேவியும் தோன்றினார்கள். இதைக்கண்டு மகிழ்ந்த அசுரர்களும் தேவர்களும், மீண்டும் கடைய தொடங்கினர். மீண்டும் கடையப்பட்ட திருப்பாற்கடலிலிருந்து மிகவும் பரிமளமான பாரிஜாத வ்ருக்ஷமும், அற்புதமான அப்சரஸ்திரீகளும், குளுர்ச்சியுடைய கிரணங்களைக் கொண்ட சந்திரனும் தோன்றினார்கள். குளிர்ச்சிக் கொண்ட சந்திரனை ருத்திரமூர்த்தி எடுத்துக்கொண்டார். அப்போது மிகவும் கொடிய ஆலகாலவிஷமும் தோன்றியது. அந்த விஷத்தை சிவபெருமானும் நாகேந்திரியர்களும் கிரஹித்துக்கொண்டனர். அதன்பிறகு பகவதம்சமான தன்வந்திரி வெண்மையான ஆடைகளையும் மலர் மாலைகளையும் அணிந்து அமிர்த கலசத்தோடு தோன்றினார். பிறகு அதியற்புதமான திவ்யபிரகாசச் சிறப்போடு மலர்ந்த செந்தாமரையில் மகாலட்சுமி வடிவமாக ஜகன்மாதாவான பெரியப்பிராட்டியார் திருவவதாரஞ் செய்வதைக் கண்டு, முனிவர்களெல்லாம் மகிழ்ந்து ஸ்ரீசூக்தங்களைக் கொண்டு துதித்தார்கள். இதையே ஸ்ரீதேசிகன் ஸ்ரீஸ்துதியில், 'அக்ரே பர்து: ஸரசிஜமயே பத்ர பீடே நிஷண்ணாம்| அம்போராஸேரதிகத சுதா சம்ப்லுவாத்துதிதாம் த்வாம்||" என்று கூறுகிறார். அப்போது பிராட்டியின் ஸன்னதியில் கந்தர்வர்கள் கீதங்கள் பாட, அப்சரசுகள் நடனமாடினார்கள். கங்கை முதலிய மஹாநதிகள் பிராட்டியை திருமஞ்சனம் செய்ய தங்களின் தூய நீரை எடுத்துவர, திக்கஜங்கள் பொற்கலசங்களால் அந்த தண்ணீரைக் கொண்டு பிராட்டியை திருமஞ்சனம் செய்தனர். விஸ்வகர்மா ரத்னாபரணங்களை தாயாருக்கு சாற்றினார். பின்னர் மனம் உகந்த பிராட்டியார் விஷ்ணுவின் திருமார்பில் எழுந்தருளினார். அதைக்கண்ட அனைவரும் அந்த திவ்யதம்பதியை பலவகையாக துதிக்கலானார்கள். இவ்வாறு ஸ்ரீதேவியின் அவதாரக் கதையை பராசரர் மைத்ரேயருக்கு கூறினார். பிராட்டிதேவி எம்பெருமானை எந்த ஓர்க்ஷணமும் பிரியமாட்டார்கள் என்றும், பிருகு - கியாதி, அதிதியின் குமாரன் - பதுமை, பரசுராமர்-தரணி, சக்ரவர்த்திதிருமகன்-சீதா, கண்ணன் - ருக்மணி என்று ஜனார்தனனின் அவதாரங்கள் பயன்பெற பிராட்டியும் அவதாரம் செய்தார் என்று பராசரர் கூறினார். அதோடு இந்த திருஅவதாரத்தை பாராயணம் செய்பவர்களுக்கு திவ்யதம்பதிகளின் நித்யனுக்கிரஹம் உண்டு என்று கூறினார். இவ்வாறு விஷ்ணுவை பிரியாதவளான பெரியபிராட்டியை "விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயி நீ" என்று விஷ்ணு புராணம் கூறுகின்றது. ஸ்ரீவிசிஷ்டாத்வைதம் கூறுவதுபோன்று ஸ்ரீயின் சிறப்பு இதன்மூலம் நமக்கு நன்கு தெரியலாகிறது. ஆகையால் ஸ்ரீதேசிகன் "மாதா தேவி த்வமஸி பகவான் வாசுதேவ: பிதா மே ஜாத:| சோளுஹம் ஜனனி யுவயோர் ஏக லக்ஷ்யம் தயாயா: ||' என்று கூறுவது போன்று திவ்யதம்பதிகளை ஏகலக்ஷ்யமாக சரணடைவோமாக.

- விக்னேஸ்வரன். ச (தொடரும்)