விஷ்ணு புராண கதைகள்
ஸ்ரீ ஆராவமுத தாதயார்ய மஹாதேசிகாய நம:

மனுவின் படைப்பு

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவானஹமவ்யயம் |
விவஸ்வான் மனவே ப்ராஹ மனுரிக்ஷ்வாகவேSப்ரவீத் || (பகவத் கீதா 4.1)

மனிதர்கள் மற்றும் பல்வேறு உலகங்களின் படைப்புகள் பற்றி வரை முந்தைய தொடர்களில் கண்டோம். இந்த வாரம் மனு முதலியவர்களின் படைப்புக்களைப்பற்றி காண்போம். பிரஹ்மன் முதலில் படைத்த தேவ-மனுஷ்யாதி படைப்புகள் அபிவிருத்தியாகாமல் போயின. இதனால் மீண்டும் பிரஜா சிருஷ்டி செய்ய எண்ணி ஹிரணியகர்பன் தன் மனதால் 1. மரீசி, 2. அத்திரி, 3. அங்கிரசு, 4. புலஹா, 5. புலஸ்தியர், 6. கிரது, 7. வசிஷ்டர், 8. தக்ஷர், 9. பிருகு 10. நாரதர் ஆகியோரை படைத்தார். ஆனால் இவர்கள் வைராக்கியத்துடன் மோஷோபாயன காரியங்களில் ஈடுப்பட்டுக்கொண்டு பிரஜா ஸ்ருஷ்டி செய்யாமல் இருந்தனர். இதனால் கடும் கோபம் கொண்ட பிரஹ்மாவின் நெற்றியிலிருந்து பொங்கிய பெரும் ஜ்வாலையின் மத்தியில் மிகவும் உன்னதரூபமுடைய அர்த்தநாரி ரூபத்தில் ருத்திரன் தோன்றினார். ஆண் பாதியும் பெண் பாதியும் கொண்ட அம்மூர்த்தி, ஆண்-பெண் என்று வேறாக பிரிந்தனர். பின் அந்த வேறுபட்ட ஆண் பெண் ரூபங்கள் பல்வேறு விதங்களாகப் பிரிந்தனர். அதோடு ஹிரணியகர்பன் தன் மனதால் மனு என்ற புருஷனையம் சதரூபை என்ற பெண்ணையும் படைத்து, இருவரையும் மணம் செய்ய கட்டளையிட்டார். இதையே இராமாயணத்தில், வனவாசம் பூண்ட ராமனை அயோத்திக்கு திரும்பழைத்துவர விரும்பி, "யஸ்யேயம் பிரதமம் தத்தா ஸம்ருத்தா மனுனா மஹி (அ.கா 110.7)" என்று உலகின் முதல் அரசனான மனுவின் இக்ஷ்வாகு வம்சத்தின் பெருமையை வசிஷ்டர் கூறினார். இவ்வாறாக முதலாக படைக்கப்பட்ட ஜீவன்கள் நித்யப் பிரளயத்திற்கும், நிதிய சிருஷ்டிக்கும் மற்றும் நித்திய ஸ்திதிக்கும் காரணமாவார்கள். இவ்வாறு பராசரர் கூறிக்கொண்டு இருக்கும்போது மைத்ரேயர் அவரை நோக்கி, "அந்நித்யமான பிராணிகளிடம் இருந்து நித்தியமான பிரளயம், ஸ்திதி, சிருஷ்டி வர காரணம் யாது?" என்று வினவினார். அதற்கு பதிலளித்த பராசரர், பூதபாவனனும், அறியக்கூடாத சொரூபனும், நித்யனுமான ஸ்ரீமதுசூதன் தன் திறனால் மனு முதலான வெவ்வேறு ரூபங்களை கொண்டு பிரளயம், ஸ்திதி, சிருஷ்டியாகிய காரியங்களை செய்கிறான் என்று கூறினார். ஆகையால் இக்காரியங்களும் நித்தியமாகும். இதையே பகவான் பகவத் கீதையில், "ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ரிதிம் யாந்தி மாமிகாம் கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம் (9.7)" என்று கூறுகிறார்.

பிரளய பேதங்கள் நான்கு வகைப்படும்:
நைமித்திகம் - பிரஹ்மாவின் பகல் முடிவில் உண்டாவது
ப்ராக்ருதம் - பிரஹ்மாவின் ஆயுள் முடிவில் உண்டாவது
ஆத்தியந்திகம் - யோகி பகவானிடம் சாயுஜ்யம் அடைவது
நித்தியம் - தேவ/மனுஷ்யாதி/மிருக பூதங்கள் அதனது ஆயுள் முடிவில் மரணமடைவது

சிருஷ்டி பேதங்கள் மூன்று வகைப்படும்:
ப்ராக்ருதம் - பிரஹ்மாவின் பிறப்புக்கு முன் ப்ரகிருதியின் அஹங்காரத்தால் உண்டான தன்மாத்திரைகள்
நைமித்திகம் - நைமித்திக பிரளயம் பின்னான சிரிஷ்டி
நித்தியம் - சொர்க/நரக அனுபவம் பின்னர் ஜீவாத்மாக்களை மனிதன்/மிருகம்/பறவைகளை சிரிஷ்டித்தல்
ஆகவே, பிரளயம், ஸ்திதி, சிருஷ்டி எம்பெருமானின் சங்கல்பத்திற்கு தக்கவாரே நடைபெறுகின்றன.

- விக்னேஸ்வரன். ச (தொடரும்)