ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஸ்ரீ ஆராவமுத தாதயார்ய மஹாதேசிகாய நம:

திருப்பாற்கடலில் அமிர்தம் கடைதல்

அவ்யாஸுர்புவன த்ரயீமனிப்ருதம் கண்டூயனைரத்ரிணா
நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபுஷோ நிஸ்வாஸவாதோர்மய: |
யத்விக்ஷேபண ஸம்ஸ்க்ருதோததிபய: ப்ரேங்கோள பர்யங்கிகா
நித்யாரோஹணனிர்வ்ருதோ விஹரதே தேவஸ்ஸஹைவ ஸ்ரியா ||
- தசாவதார ஸ்தோத்திரம் (3)

முந்தய மாதம் மனு முதலியானோர்களின் படைப்பை பார்த்தோம். இந்த மாதம் திருப்பாற்கடல் கடைந்த கதையை காண்போம். ஒரு சமயம் ருத்திரருடைய அம்சமான துர்வாச மஹாமுனிவர் வனத்தின் வழியாக சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது ஓர் மங்கை தன் கையில் மிகுந்த பரிமளம் கொண்ட மாலையை வைத்திருந்தாள். அதை கண்ட துர்வாசர் தனக்கு அந்த மாலையை தரும்படி அந்த மங்கையிடம் கூறினார். அந்த மங்கையும் மிகுந்த பக்தியுடன் துர்வாசருக்கு அந்த மாலையை கொடுத்தாள். அந்த மாலையை தன் தலையில் சுற்றிக்கொண்டு துர்வாசர் தன் பயணத்தை தொடர்ந்தார். அப்போது அவ்வழியில் தேவேந்திரன் ஐராவததில் வந்து கொண்டிருந்தான். துர்வாசர் தான் அணிந்திருந்த மாலையை இந்திரன் கழுத்தில் விழும்வண்ணம் விட்டெறிந்தார். இந்திரன் அந்த மாலையை ஐராவதத்திற்கு சூட்டினான் அதனால் யானை மதங்கொண்டு அந்தமாலையை தன் துதிக்கையால் தூக்கியெரிந்தது. இதைக்கண்ட துர்வாசர் கடுங்கோபம் கொண்டு இவ்வாறு தான் அணிந்த மாலையை அங்கீகரிக்காத இந்திரனை நோக்கி, "உன் உலகதிலிருக்கும் அணைத்து ஐஸ்வர்யங்களும் சீக்கிரம் நாசமடையும்" என்று சபித்தார். அன்றுமுதல் மூன்று உலகங்களும் ஐஸ்வர்யமற்று யாகாதி கர்மங்களும் நன்றாக நடைபெறவில்லை. அசுரர்கள் பலம், ஐஸ்வர்யம் குன்றிய தேவர்களை துன்புறுத்தினார்கள். இதனால் தேவர்கள் அனைவரும் ஹிரணியனைச் சரணடைந்து தங்களின் துன்பங்களை கூறினர். அதைக்கேட்ட ப்ரஹ்மதேவன் "பராபரங்களனைத்துக்கும் ஈஸ்வரனும், காரணிமின்றி தானே சுதந்திரமாக இருப்பவனுமான, ஸ்ரீயப்பதியை சரணடையுங்கள்" என்று கூறினார். தேவர்களும் திருப்பாற்கடல் அடைந்து ஆதி புருஷனான ஹரியை பல்வேறு வகையாக துதித்தனர், ஸ்ரீவிஷ்ணுவும் திருவாழிதிருசங்குடன் திவ்யமங்கள ரூபமுடையவராய் சேவை தந்து அருளினார். இதைக்கண்ட சதுர்முக ப்ரஹ்மாவும், தேவர்களும் ஆனந்தத்தால் கண்கள் மலர்ந்து அதிசயத்தால் அடிக்கடி கீழேவிழுந்து துதித்தனர். எம்பெருமான் தேவர்களை அவர்களின் பல, சத்வ, தேஜோ தைரியங்களை அபிவிருத்தி செய்வதாகவும் அதற்காக தேவர்களை அசுரர்களுடன் சேர்ந்து திருப்பாற்கடலை கடைந்து அதிலிருந்துவரும் அமிர்தத்தை தேவர்கள் பானஞ்செய்யும்படி கூறினார். விரோதர்களான தேவர்களும் அசுரர்களும் ஒன்றுசேர்ந்து திருப்பாற்கடலை கடைய முன்வந்தார்கள். ஸ்ரீவிஷ்ணு சாமர்த்தியமாக வாசுகியின் தலையை அசுரர்கள் பிடிக்கும்படியும் வாலை தேவர்கள் பிடிக்கும்படியும் செய்தார். இதனால் வாசுகியின் விஷாக்னிச் சுவலையுடன் கூடிய பெருமூச்சுக்காற்று அசுரர்களை பலவீனமாக்கியது. அதோடு அந்த பாம்பின் சுவாசக்காற்றின் பெருவேகத்தால் மேகங்கள் அனைத்தும் அதன் வால்பக்கம் தள்ளி தேவர்கள் சுகமடையும் வண்ணம் மழையாக பெய்ந்தது. மத்தியிலிருந்து மந்தர மலை ஆதாரமாக இருந்து சுழலச்செய்ய ஸ்ரீமன் நாராயணன் மகாகூர்ம அவதாரம் எடுத்து அம்மலையை தாங்கினார்.

(தொடரும்)
- விக்னேஸ்வரன். ச